யெரேவன்,
ஆர்மேனியாவில் 10 ஆண்டுகள் அதிபர் பதவி வகித்தவர், செர்ஜ் சார்க்ஸ்யன். இவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் அங்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் முயற்சிதான் இது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. அதைத்தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார். வேறு வழியின்றி அவரும் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து நிகோல் பாஷின்யன் பிரதமர் ஆனார்.
ஆனால் அவரும் பதவியில் தொடராமல், ராஜினாமா செய்து விட்டார். இந்தநிலையில் அங்கு கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடந்தது. அதில் புதிய பிரதமரை தேர்வு செய்ய முடியவில்லை. அந்த நாட்டு சட்டப்படி நாடாளுமன்றத்தை கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழல் உருவானது.
இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. இதற்கான உத்தரவில் அந்த நாட்டின் அதிபர் அர்மீன் சார்கிசியான் கையெழுத்து போட்டார். அங்கு டிசம்பர் மாதம் 9ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.