லாகூர்,
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கழகம் காற்றின் தரம் பற்றிய அளவீடுகளை வெளியிட்டு உள்ளது. இதன்படி, காற்று தர குறியீடு 50க்கு கீழ் இருப்பது திருப்தியளிக்க கூடியது என தெரிவித்து உள்ளது. ஆனால், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரம் காற்று தர குறியீடு 216 ஆக கொண்டுள்ளது. இது அதிக ஆரோக்கியமற்ற சூழலை குறிக்கிறது.
இதேபோன்று அந்நாட்டின் மற்றொரு நகரான லாகூர் நகரம் காற்று தர குறியீடு 200 ஆக கொண்டுள்ளது. இது ஆரோக்கியமற்ற சூழலை குறிக்கின்றது.
அந்நாட்டின் பஞ்சாப் பேரிடர் மேலாண் கழகம் காற்று மாசுபாட்டை குறைக்க 613 செங்கற்சூளைகளுக்கு மற்றும் 2,148 தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தது. 8,579 வாகனங்களையும் பறிமுதல் செய்தது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க, அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 478 பேரை கைது செய்துள்ளது.
இந்த நிலையில், உலகில் காற்றின் தரம் அதிகம் மோசமடைந்த முதல் 5 நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரம் 4வது இடத்திலும், லாகூர் நகரம் 5வது இடத்திலும் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் வங்காளதேசத்தின் டாக்கா மற்றும் கிர்கிஸ்தானின் பிஷேக் ஆகிய நகரங்களும் உள்ளன.