இஸ்லாமாபாத்,
தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு சிறப்பு கோர்ட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடி தீர்ப்பு வழங்கியது. கோர்ட்டின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து முஷரப் மேல்முறையீடு செய்வதற்கு பாகிஸ்தான் அரசு அவருக்கு துணை நிற்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தன் மீதான தனிப்பட்ட பகையை தீர்க்க பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக முஷரப் கருத்து தெரிவித்துள்ளார். துபாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முஷரப், ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தபடியே பேசும் வீடியோவை அவரது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-
அரசியலமைப்பின் கீழ் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க எந்த அவசியமும் இல்லை. ஆனால் என் மீதான சிலரின் தனிப்பட்ட பகை காரணமாக இது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதனால் எனது தரப்பு நியாயங்களை கேட்க கோர்ட்டு மறுத்துவிட்டது. ஆனால் நீதி வெல்லும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது வக்கீல்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பேன். எனக்கு துணை நிற்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும், மக்களுக்கும் எனது நன்றிகள்.
இவ்வாறு அவர் பேசினார்.