லண்டன்,
இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாக பரவி வருகிறது. புதிய பாதிப்புகளில் 90 சதவீதம் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் என்று இங்கிலாந்து சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே இங்கிலாந்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற 21- தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்த சூழலில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன், மேலும் 4 வாரங்களுக்கு அதாவது ஜூலை 19- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து, ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான முன்மொழிவுக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. 461- உறுப்பினர்கள் ஊரடங்கு நீட்டிப்புக்கு ஆதரவு அளித்த நிலையில், 60 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.