நியூயார்க்,
சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு 9 லட்சத்து 87 ஆயிரத்து 322 பேரை கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கி இருக்கிறது. அவர்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையால் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள். 55 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 30 லட்சத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறும்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,04,116 ஆக அதிகரித்துள்ளது. 2,07,118 பேர் பலியாகியுள்ளனர், 882,770 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.