விஷ்ணு அலங்காரப்பிரியர். எனவே பக்தர்கள் அவரை விதவிதமாக அலங்கரித்துப் பார்ப்பது வழக்கம். அவரது அலங்காரத்தில் துளசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். மணம் மிகுந்த பொருட்களைக் கொண்டு தன்னை அபிஷேகித்து, துளசியால் தன்னை அலங்கரித்து வழிபடும் பக்தர்கள் கேட்கும் வரத்தை அருள்வது திருமாலின் வழக்கம். அப்படி தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கிருஷ்ணன் கோவில்.
கி.பி. 1464-ல் செஞ்சியை ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் என்னும் பாளையக்காரர் தனது பாசத்துக்குரிய சகோதரி வேங்கடம்மாளின் பெயரில் நிர்மாணித்த ஊர் இதுவாகும். அவரது பெயரால் வெங்கடம்மாள்பேட்டை என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் வெங்கடாம்பேட்டை என மருவியது.
தல வரலாறு
ராமபிரான், தன் தம்பி லட்சுமணனுடன் சீதா தேவியை தேடி இவ்வழியாக வந்தார். இயற்கை எழிலும், அழகான சூழலும், பல்வேறு சுகந்த மணங்களும் நிரம்பியிருந்த தீர்த்தவனம் என்னும் இந்தப் பகுதி ராமரைக் கவர்ந்தது. எனவே ஒரு நாள் இரவு அங்கேயே தங்கினார். மனைவியின் பிரிவால் பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்த ராமபிரான், தம்பி லட்சுமணனின் மடி மீது தலை வைத்து சுகமான நித்திரை செய்தார். பின்னர் தில்லைவனம் (சிதம்பரம்) நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
இலங்கைச் சென்று சீதையை மீட்ட ராமபிரான், திரும்பி வரும் வழியில் மீண்டும் இந்த இடத்திற்கு வந்தார். அப்போது சீதை பிராட்டி, அனுமன் ஆகியோருடன் ஆதிசேஷன் மீது துயில் கொண்டு அரங்கனைப் போல சேவை சாதித்து, இந்தப் பூமியின் மகத்துவத்தை உலகறியச் செய்தார்.
பிற்காலத்தில் சைவ - வைணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தில்லைவனத்தில் அரங்கனாக காட்சி தந்து அருள்பாலித்த கோவிந்தராஜ பெருமாளின் சிலை கடலில் ஆழ்த்தப்பட்டது. இதனால் தில்லை திருச்சித்ரக்கூடம் வெறிச்சோடிப் போனது. இதைக் காண மனம் ஒப்பாத வைணவர்கள் பராந்தகச் சோழனிடம் முறையிட்டனர். மன்னரின் முயற்சியால் தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்புதலோடு திருச்சி த்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய அரங்கனின் சிலை 18 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டது.
ஆனால் அவ்வளவு பெரிய திருமேனியை பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு கிளம்பவே, தற்போதுள்ள சிறிய அளவிலான கோவிந்தராஜ பெருமாள் சிலை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. பேரழகனாக, அரி துயில் அரங்கனாக உருவாக்கப்பட்ட 18 அடி சிலை, ராமபிரானுக்கு மிகவும் பிடித்த தீர்த்த வனத்தில் (வெங்கடாம்பேட்டை) அனந்த சயன ராமனாக மக்களால் நிலைநிறுத்தப்பட்டது.
திருமாலின் 18 அடி சிலையை, திருச்சித்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய இடம் கிடைக்காத ஆதங்கத்தில் இருந்த வைணவர்கள், தில்லைவனத்திற்கு போட்டியாக தீர்த்தவனத்தை உருவாக்க நிலைப்பாடு கொண்டனர். அதன்படி தில்லையில் காலைத்தூக்கி நின்றாடும் நடராஜபெருமானுக்கு ஒப்பாக, கால் மடித்து ஊன்றி நின்று வேய்குழல் ஊதும் வேணுகோபாலனை பாமா- ருக்மணி சமேதராக தனி சன்னிதி அமைத்து மூலவராக்கினர். திருமூலட்டானத்து இறைவனுக்கு நிகராக வைகுண்டவாச பெருமாளையும் தொடர்ந்து ஆண்டாள், ஆழ்வார்கள், உடையவர் ஆகிய மூர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்தனர். இப்படி சிதம்பரத்தைப் பார்த்து ஒவ்வொரு சன்னிதியாக உருவாக்கினர் என்கிறது வரலாறு.
இது பக்தர்களை கடும் மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்றார் பெருமாள்.