ஆன்மிகம்

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு- 1008 கலசாபிஷேகம்

மண்டலாபிஷேக நிறைவினை முன்னிட்டு மூலவரும் உற்சவரும் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.

பழமையான இத்திருக்கோவிலில் ரூ.1.50 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதியதாக வடக்கு ராஜகோபுரம் கட்டுதல், கோபுரங்கள் விமானங்கள் வண்ணம் தீட்டுதல், மடப்பள்ளி புனரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், தளவரிசை சீர்செய்தல் ஆகிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 07.07.2025 அன்று விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை மாலை இரண்டு வேளைகளிலும் மண்டல பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்று வந்தன.

மண்டலாபிஷேகத்தின் நிறைவு விழாவை முன்னிட்டு திருக்கோவில் முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 1008 கலசாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு நேற்று (23.8.2025) மாலையில் மூலவருக்கு முன்புள்ள மகா மண்டபத்தில் 1008 கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு ஆவாகனம் செய்யப்பட்டு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரகார மூர்த்திகளான விஜய விநாயகர், சண்முகர், தேவி திரபுரசுந்தரி கருமாரியம்மன், உற்சவர் ஆகிய மூர்த்திகளுக்கு 108 சங்குகளில் புனிதநீர் ஊற்றி ஆவாகனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் வேதமந்திரங்கள் ஒலிக்க யாக பூஜைகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து மண்டலாபிஷேகத்தின் நிறைவு நாளான இன்று (24.8.2025) காலையில் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன. பிறகு மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு அபிஷேகத்தை கண்டுகளித்தனர்.

இதனைத்தொடர்ந்து பிரகாரத்தில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் தனித்தனியே 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மண்டலாபிஷேக நிறைவினை முன்னிட்டு மூலவரும் உற்சவரும் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மூலவருக்கு வெள்ளை தாமரையால் ஆளுயர மாலையும் வெற்றிலை மாலையும் அணிவிக்கப்பட்டு, சாமந்தி மலர்மாலை ஆரங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

விடுமுறை தினம் என்பதாலும் மண்டல பூஜை நிறைவுநாள் என்பதாலும் திரளான பக்தர்கள் வல்லக்கோட்டை முருகனைத் தரிசிக்க வந்திருந்தனர்.

அதிகாலை 5 மணிக்கு 1008 கலசாபிஷேகம் தொடங்கி, தொடர்ந்து 4 மணிநேரம் வேதமந்திரங்கள் முழங்க கலசாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.

மண்டலாபிஷேக நிறைவு நாள் பூஜைகளில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு சர்க்கரைப்பொங்கல், கதம்பசாதம், மோர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்