ஆன்மிகம்

முருகன் கோவில்களில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார உற்சவம்

சூரனை முருகப்பெருமான் வதம் செய்த இடம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.

தினத்தந்தி

அசுரனான சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த நாள் ஐப்பசி வளர்பிறை சஷ்டியாகும். இந்த நிகழ்வானது முருகன் கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வு சூரசம்ஹாரம். இந்நிகழ்வு திருத்தணி தலம் தவிர முருகன் எழுந்தருளி அருள்பாலிக்கும் மற்ற அனைத்து தலங்களிலும் வெகுவிமரிசையாகவும் பக்தி சிரத்தையுடனும் நடத்தப்படுகிறது. சூரனை வதம் செய்த இடம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டுவார்கள்.

இத்தனை சிறப்புமிக்க சூரசம்ஹார நிகழ்வு இன்று (27.10.2025) விமரிசையாக நடைபெற்றது. சூரசம்ஹார விழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் கொண்டாட்டம் களைகட்டியது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருச்செந்தூர்

திருச்செந்தூரில் இன்று மாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டிருக்க, அவர்கள் முன்னிலையில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து ஆட்கொண்டார். இதேபோல் பிற அறுபடை வீடு தலங்களான திருப்பரங்குன்றம் பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சேலை ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். இதன் காரணமாக, இக்கோவிலில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவது இல்லை. அதற்கு மாறாக இன்று உற்சவர் சண்முக பெருமானின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைப் பொருத்தவரை வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவில், வல்லக்கேட்டை முருகன் கோவில், திருப்போரூர் சுப்பிரமணிய சாமி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்களில் இன்று விமரிசையாக சூரசம்ஹாரம் நடைபெற்றது.

சூரசம்ஹார நிகழ்விற்காக முருக பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக கந்த சஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். ஆனால், விரதம் பின்பற்ற முடியாதவர்கள் சூரசம்ஹாரம் நாளான இன்று ஒரு நாள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.

நாளை (செவ்வாய்கிழமை) மாலை 6 மணி அளவில் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு