அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பொருள் இழப்புகளை மட்டுமின்றி, நூற்றுக்கணக்கானோரையும் பலி வாங்கிவருகிறது. நிலப்பரப்பில் நடந்த தாக்குதல் நீலக்கடலுக்கு அடியிலும் புகுந்துவிட்டது. இதில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் அதிக வருத்தம் இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவுக்கு விருந்தாளியாக வந்த ஈரான் நாட்டு கடற்படை கப்பல், இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் அமெரிக்க கடற்படையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட 'டார்பிடோ' என்று அழைக்கப்படும் நீர்மூழ்கி ஏவுகணையால் தாக்கப்பட்டு ஜல சமாதியாகியது. சர்வதேச கப்பல் போக்குவரத்து ஆய்வு 2026, கப்பல்களின் பாதுகாப்பு ஒத்திகை 2026, பல்வேறு நாடுகளின் கடற்படை தலைவர்களின் மாநாடு ஆகிய 3 சர்வதேச முக்கிய கடல்சார் நிகழ்வுகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடந்தது. இதில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் கடற்படை கப்பல்கள் பங்குபெற்றன.
நடுக்கடலில் இந்த நாடுகளின் கப்பல்கள் மெய்சிலிர்க்கும் சாகசங்களை செய்து அசத்தியதும், நகருக்குள் அந்த நாட்டு வீரர்கள் கம்பீரத்துடன் உலா வந்ததையும் அங்குள்ள மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். இந்த நாட்டு கப்பல்களின் அணிவகுப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தில் இருந்து பார்வையிட்டார். இதையொட்டி வங்காள விரிகுடாவில் நடந்த நீருக்கு அடியிலான போர் பயிற்சி மற்றும் வான்வழி பாதுகாப்பு ஒத்திகைகள் காண்பவர்களை பரவசப்படுத்தியது. கடற்படை கூட்டு பயிற்சியில் ஈரான் நாட்டு கடற்படை கப்பலான 'ஐரிஸ் டெனா'வும் கலந்துகொண்டது. அந்த நாட்டின் பெருமையாக கருதப்படும் இந்த கப்பலில் இருந்த 140 வீரர்கள் பசுமை நிறைந்த நினைவுகளோடு விசாகப்பட்டினத்தில் இருந்து தங்கள் நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
கடந்த புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு இந்த கப்பல், இலங்கையின் தென்கடலோரத்தில் இருந்து 40 கடல்மைல் தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அதை மோப்பம் பிடித்துச்சென்ற அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அதன்மீது டார்பிடோவை கொண்டு தாக்கியது. இதில் அந்த கப்பல் அப்படியே கடலுக்குள் மூழ்கியது. அந்த கப்பலில் இருந்து வந்த அபய குரலை கேட்டு, இலங்கை கடற்படையின் 2 கப்பல்கள் உடனடியாக விரைந்தன. அங்கு போராடிக்கொண்டிருந்த 32 பேரை உயிருடனும், உயிரற்ற நிலையில் மிதந்த 87 பேரின் உடல்களையும் மீட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்கா இப்போதுதான் முதல்முறையாக எதிரி நாட்டு கப்பல் மீது நீர்மூழ்கி கப்பலில் இருந்து டார்பிடோவை ஏவியுள்ளது. இது ஒட்டுமொத்த உலகத்துக்கே அதிர்ச்சி அளித்துள்ளது.
ஈரான் வீரர்கள் ராணுவ சீருடையில் மிடுக்காக அணிவகுப்பில் கலந்துகொண்டனர். மேலும் சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் போன்ற பல இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களோடு அளவளாவி செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர். மேலும் நினைவுச்சின்னமாக இருக்கவேண்டும் என்பதற்காக கடைகளுக்கு சென்று தங்கள் குடும்பத்தினருக்காக பல்வேறு பொருட்களை வாங்கியதையும் விசாகப்பட்டினம் மக்கள் சோகத்துடன் விவரித்தனர். ஈரான் வீரர்கள் நட்புடன் உறவாடிய மக்களோடு எடுத்த செல்பியையும், வாங்கிய பொருட்களையும் குடும்பத்தினரிடம் கரை சேர்க்க முடியாமல் சமாதியாகி விட்டார்களே என்று மனம் உருகுகிறார்கள். ஈரான் வீரர்களின் கண்ணீர் பிரிக்கமுடியாத வகையில் கடல்நீருடன் கலந்துவிட்டது. அவர்களை இழந்த சோக அலைகள், நெஞ்சில் ஈரம் உள்ள ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கடல் அலைகள் போல ஒருபோதும் ஓயாது.