தலையங்கம்

எகிறப்போகும் பெட்ரோல் - டீசல், தங்கம் விலை

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடுத்திருக்கும் போர் இந்தியாவுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

உலகப்போரின்போது ஹிட்லர், 'போர் இது போர்' என்று முழங்கினார். அதுபோலத்தான் இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற 13 மாதங்களில் மட்டும் 7 நாடுகள் மீது அந்நாடு குண்டு மழை பொழிந்துள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பை கைவிடவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தது. இப்போதும் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருந்தது. ஏன் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதிகூட இந்த நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்துகொண்டிருந்த ஓமன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பதர் அல்புசைதி இதற்கான ஒப்பந்தம் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது என்றார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டு உலகமே நம்பிக்கையோடு இருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் அடுத்த நாளிலேயே ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. அதுவும் அந்த நாட்டின் உச்சபட்ச தலைவரான 86 வயது அயதுல்லா அலி காமேனி தங்கியிருந்த அலுவலகம் மற்றும் வீடு இருந்த வளாகத்தின் மீது 1,600 கிலோ மீட்டர் தொலைவில் நின்றிருந்த அமெரிக்க போர் கப்பலில் இருந்து துல்லியமாக குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் காமேனி, அவரது குடும்பத்தினர், ஈரானின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். காமேனி இருக்கும் இடத்தை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. பல மாதங்களாக ரகசியமாக கண்காணித்து இந்த திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறது.

ஈரானும், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரினால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயரும் அபாயம் இருக்கிறது. ஏனென்றால் ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்மஸ் நீரிணை அதாவது ஜலசந்தியை மூடிவிட்டது. இதனால் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற நாடுகளில் இருந்து செல்வதற்கான வழக்கமான பாதை அடைக்கப்பட்டு விட்டதால் கப்பல்கள் மாற்றுபாதையில் வரவேண்டியது இருக்கிறது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையில் 50 சதவீதமும், 60 சதவீத எரிவாயும் கப்பல்களில் வருகிறது. இப்போது கூடுதலாக 4,500 கிலோ மீட்டர் செங்கடல் வழியாக சுற்றி வரவேண்டியது இருக்கிறது. இதனால் வழக்கத்தைவிடவும் குறைந்தது 12 நாட்கள் அதிகமாக ஆகும்.

Also read:நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை: 6-ந்தேதி முதல் மீண்டும் தொடக்கம்

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72.90 டாலராக இருந்த நிலையில், நேற்று மாலையில் 80 டாலரை எட்டிவிட்டது. இனி 80, 82 என உயர்ந்து சீக்கிரம் 100 டாலரையும் எட்டிப்பிடித்துவிடும். ஆக இந்த உயர்வு எல்லாம் நம் நாட்டில் பெட்ரோல்-டீசல் விலையை விண்ணை தொடவைத்துவிடும். இதுபோல ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் விலைவாசியும் உயரும். இதுமட்டுமல்லாமல் போர் அபாயத்தினால். பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டதால், இனி தங்கத்தின் விலையும் எட்டாத உயரத்துக்கு போய்விடும். ஆக 'தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்' என்பதுபோல ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடுத்திருக்கும் போர் இந்தியாவுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.