தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் இடிமுழக்கம். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது, திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமிக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் பதிவுக்கு பதிலளித்து டுவிட் செய்திருந்த இயக்குனர் சீனு ராமசாமி, ஜி.வி.பிரகாஷுக்கு வெற்றித்தமிழன் என்ற புது பட்டத்தை கொடுத்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன், உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் அன்பன் ஆகிய பட்டங்களை கொடுத்ததும் சீனு ராமசாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.