கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20: நியூசிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச, தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் மற்றும் டோனி டி சோர்சி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், வியான் முல்டர் ரன் ஏதும் 0(2) எடுக்காமல் வெளியேறினார். அடுத்து டோனி டி சோர்சியுடன் கானர் எஸ்டர்ஹுய்சென் ஜோடி சேர்ந்தார்.

இதில் டோனி டி சோர்சி நிதானமாக ஆட, அதிரடியில் இறங்கிய கானர் எஸ்டர்ஹுய்சென் அரைசதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில், கானர் எஸ்டர்ஹுய்சென் 57(36) ரன்களில் இருந்தபோது அவுட்டானார். தொடர்ந்து, மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த டோனி டி சோர்சியும் 23(21) ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து, ரூபின் ஹெர்மன் - டியன் போரெஸ்டர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆட ஸ்கோர் உயர்ந்தநிலையில், டியன் போரெஸ்டர் 19(14) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜேசன் ஸ்மித்தும் 19(14) ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஜார்ஜ் லிண்டே அதிரடி காட்ட ஸ்கோர் 160-ஐ தாண்டியது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கானர் எஸ்டர்ஹுய்சென் 57(36) ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் கைல் ஜெமிசன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்க உள்ளது. இந்த தொடரில் 2-1 என்ற நிலையில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.