அகமதாபாத்,
ஐபிஎல் 2026 தொடரில் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானேவிற்கு ஒரு மறக்க முடியாத மைல்கல்லாக அமைந்தது. அது அவர் விளையாடிய 300-வது டி20 போட்டியாகும். இதன் மூலம் 300 டி20 போட்டிகளில் விளையாடிய 18-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், ஆட்டத்தின் முதல் பந்திலேயே குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ரஹானேவை ஆட்டமிழக்கச் செய்து பேரதிர்ச்சி கொடுத்தார். முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் (Golden Duck) ரஹானே வெளியேறினார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 'கோல்டன் டக்' ஆன கொல்கத்தா கேப்டன்களின் பட்டியலில் ரஹானே தற்போது இணைந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் கொல்கத்தா கேப்டன் ஒருவர் கோல்டன் டக் ஆவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கவுதம் கம்பீர் (5 முறை) (கடைசியாக 2016-ல்) மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் கேப்டனாக இருந்தபோது முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளனர்.
ரஹானேவின் விக்கெட்டைத் தொடர்ந்து கொல்கத்தா அணி நிலைகுலைந்தது. ககிசோ ரபாடாவின் அசுர வேகத்தில் டிம் சைபர்ட் மற்றும் ரகுவன்ஷி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் எடுத்து கொல்கத்தா தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிதானமாக ஆடிய கேமரூன் கிரீன் அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் அடித்த அதிரடி 79 ரன்களின் உதவியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ரன்களை எட்டியது.
இருப்பினும், இப்போட்டியில் கொல்கத்தா தோல்வியடைந்தது. இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத கொல்கத்தா அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் நீடிப்பது அதன் ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.