அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் (பகல்-இரவு) போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பான்கிராப்ட், டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
அணியின் ஸ்கோர் 33 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் பான்கிராப்ட் (10 ரன்) கிறிஸ்வோக்சால் ரன்-அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். அடுத்து உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். அரைசதத்தை நெருங்கிய நிலையில் டேவிட் வார்னர் (47 ரன்கள், 102 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) கிறிஸ்வோக்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதைத்தொடர்ந்து கேப்டன் ஸ்டீவன் சுமித் களம் இறங்கினார். சற்று நிலைத்து நின்று ஆடிய உஸ்மான் கவாஜா (53 ரன்கள், 112 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சிலும், கேப்டன் ஸ்டீவன் சுமித் (40 ரன்கள், 90 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) அறிமுக வீரர் கிரேக் ஓவர்டான் பந்து வீச்சிலும் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 81 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. ஹேன்ட்கோம்ப் 36 ரன்னுடனும் (83 பந்துகளில் 5 பவுண்டரியுடன்), ஷான் மார்ஷ் 20 ரன்னுடனும் (58 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) களத்தில் உள்ளனர். 3 முறை மழை குறுக்கிட்டதால் சுமார் 2 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.