8-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. ஆப்பிரிக்க கண்டத்தில் அரங்கேறிய முதல் உலக கோப்பை இது தான். முந்தைய உலக கோப்பையில் ஆடிய ஸ்காட்லாந்து தகுதி பெறவில்லை. கனடா, நமிபியா, நெதர்லாந்து அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இதனால் இந்த உலக கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரம் தெண்டுல்கர் (4 ரன்) மெக்ராத்தின் முதல் ஓவரிலேயே கேட்ச் ஆக, ரசிகர்களின் இதயம் சுக்கு நூறாகிப் போனது. அதன் பிறகு ஷேவாக் (82 ரன்), டிராவிட் (47 ரன்) தவிர வேறு யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. 39.2 ஓவர்களில் இந்திய அணி 234 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. உலக கோப்பையை மூன்று முறை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையும் ஆஸ்திரேலியா வசம் ஆனது. இந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியா தோல்வியே சந்திக்காமல் 11 ஆட்டங்களிலும் வாகை சூடியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ரிக்கிபாண்டிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சச்சின் தெண்டுல்கர் (ஒரு சதம், 6 அரைசதம் உள்பட மொத்தம் 673 ரன்) தொடர்நாயகன் விருது பெற்றார். அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் தெண்டுல்கருக்கு அடுத்த இடத்தை சவுரவ் கங்குலி (3 சதத்துடன் 465 ரன்) பெற்றார். மொத்தம் 21 சதங்கள் பதிவாகின. அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இலங்கையின் சமிந்தா வாஸ் (ஹாட்ரிக் உள்பட 23 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் பிரெட்லீ (ஹாட்ரிக் உள்பட 22 விக்கெட்) முதல் இரு இடங்களை பிடித்தனர்.
தூக்கத்தை கெடுத்த மழை
இந்த உலக கோப்பையில் வருணபகவானின் விளையாட்டு பல அணிகளின் தூக்கத்தை கலைத்தது எனலாம். ஜிம்பாப்வே-பாகிஸ்தான் இடையிலான கடைசி லீக் (ஏ பிரிவு) ஆட்டம் மூன்று அணிகளின் தலைவிதியை நிர்ணயிப்பதாக இருந்தது. இதில் பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற்றால் அந்த அணிக்கு சூப்பர் சிக்ஸ் வாய்ப்பு. குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டம். முடிவில்லாமல் போனால் ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு. இப்படிப்பட்ட சூழலில் ஜிம்பாப்வேக்கு ஜாக்பாட் அடித்தது. பாகிஸ்தான் அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்த போது மழை கொட்டி தீர்த்ததால் ஆட்டம் ரத்தாக, ஜிம்பாப்வே அடுத்த சுற்றை எட்டியது.
பி பிரிவிலும் இதே நிலைமை தான். இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் 269 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது. எந்த நேரத்திலும் மழை பெய்யலாம் என்பதை அறிந்த தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அதை கணக்கிட்டு விளையாடினர். ஒவ்வொரு ஓவர் முடிவிலும் எவ்வளவு ரன் தேவை என்பது அணி நிர்வாகம் மூலம் குறிப்புகள் களத்திற்கு அனுப்பப்பட்டன. மழைக்கு முன்பாக அந்த ஓவரின் 5-வது பந்தில் சிக்சர் அடித்த மார்க் பவுச்சர், இதுவே அந்த ஓவருக்கு போதுமானது என்று கருதி கடைசி பந்தில் ரன் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து மழை பெய்தது. அப்போது தென்ஆப்பிரிக்கா 45 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி அந்த சமயத்தில் தென்ஆப்பிரிக்கா கூடுதலாக ஒரு ரன் எடுத்திருக்க வேண்டும். ஆட்டம் சமன் (டை) ஆனதால் ஷான் பொல்லாக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி வெளியேற்றப்பட்டது. பவுச்சருக்கு தவறான ரன் கணக்கீட்டு தகவலை கொடுத்ததால் தென்ஆப்பிரிக்காவின் கனவு இந்த முறையும் பொய்த்து போனது. தோல்வி எதிரொலியாக பொல்லாக் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
அரசுக்கு எதிராக குரல் கொடுத்த வீரர்கள்
இந்த உலக கோப்பையில் சில சர்ச்சைகளும் வெடித்தன. ஜிம்பாப்வேயில் ஜனநாயகம் செத்து விட்டது என்று ராபர்ட் முகாபே அரசுக்கு எதிராக ஜிம்பாப்வே வீரர்கள் ஆன்டி பிளவரும், ஒலங்காவும் குரல் கொடுத்தனர். அத்துடன் ஆட்டத்தின் போது துணிச்சலாக கையில் கறுப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை காட்டினர். இத்துடன் அவர்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலிய மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. தங்களுக்குரிய ஆட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த சர்ச்சையில் சிக்கிய வார்னே உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.