கிரிக்கெட்

முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர்... பிரமாண்ட மைல்கல்லை எட்டிய வருண் சக்கரவர்த்தி

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் முதுகெலும்பை வருண் உடைத்தார்.

கொல்கத்தா,

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தி ஒரு பிரமாண்டமான மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தப் போட்டியில் தனது முதல் ஓவரிலேயே இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி தனது 200-வது விக்கெட்டைப் பதிவு செய்தார். இதன் மூலம் டி20 வரலாற்றில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

வருண் சக்கரவர்த்தி இந்த இலக்கை வெறும் 155 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதற்கு முன்பு இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் (160 இன்னிங்ஸ்) முதலிடத்தில் இருந்தார். வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் (151 இன்னிங்ஸ்) மட்டுமே இவரை விட முன்னிலையில் உள்ளார். முகமது ஷமி (165), ஜெய்தேவ் உனட்கட் (162) போன்ற அனுபவ வீரர்களை வருண் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இப்போட்டியில் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை (வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால்) வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் கொல்கத்தா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.