மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்காவின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவெயின் பிராவோ சமன் செய்தார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். 2022 தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.
ஆனாலும் நேற்றைய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ ஐ.பி.எல்-ன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் மலிங்காவுடன் இணைந்தார். தனது கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் புதிய வீரர் சாம் பில்லிங்ஸின் விக்கெட்டைப் வீழ்த்தியதன் மூலம், பிராவோ தன்னுடைய 170 வது விக்கெட்டை பெற்றார்.
பிராவோ தனது 151-வது ஐ.பி.எல் ஆட்டத்தில் இந்த மைல்கல்லை அடைந்துள்ளார். இது ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கும் சென்னை அணிக்கு மறக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடிய மலிங்கா வெறும் 122 ஆட்டங்களில் 170 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலிங்கா ஐ.பி.எல். 2022-ல் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:
லசித் மலிங்கா - 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகள்
டுவெயின் பிராவோ - 151 போட்டிகளில் 170 விக்கெட்டுகள்
அமித் மிஸ்ரா - 154 போட்டிகளில் 166 விக்கெட்டுகள்
பியூஷ் சாவ்லா - 165 போட்டிகளில் 157 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் - 160 போட்டிகளில் 150 விக்கெட்டுகள்