ராஞ்சி,
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான 38 வயது டோனி உலக கோப்பை போட்டி தொடருக்கு பிறகு அணியில் இடம் பெறவில்லை. வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி தொடரில் இருந்து விலகிய அவர் தொடர்ந்து ஆடுவாரா? அல்லது ஓய்வு பெறுவாரா? என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. அடுத்த மாதம் நடைபெறும் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி தொடரிலும் டோனியின் பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. இந்த நிலையில் டோனி மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் களம் திரும்ப முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஜார்கண்ட் சீனியர் அணி சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட சூரத் செல்ல இருக்கிறது. இதனால் டோனி 23 வயதுக்கு உட்பட்ட ஜார்கண்ட் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். பயிற்சிக்கு தயாராகும் வகையில் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார். அத்துடன் டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற ஆட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினால் அது அவருக்கு பிரியா விடையளிக்கும் போட்டியாக தான் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.