சட்டோகிராம்,
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சட்டோகிராமில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதன் மூலம் 20 ஓவர்களில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டெக்டர் 69 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 2 ரன்கள் அடித்தார்.
பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் வெற்றிக்கு தவ்ஹித் ஹிரிடாய் தனி ஆளாக போராடினார். இருப்பினும் மற்ற யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
முடிவில் 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய வங்காளதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அயர்லாந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
வங்காளதேசம் தரப்பில் வ்ஹித் ஹிரிடாய் 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 4 விக்கெட்டுகளும், பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மேத்யூ ஹம்ப்ரிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.