மும்பை,
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக, வங்காளதேச மகளிர் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா தனது அணியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வங்காளதேச அணி இதுவரை விளையாடிய 25 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டு இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக முதல் இரண்டு வெற்றிகளை பதிவு செய்த வங்காளதேசம், அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2024 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிகர் சுல்தானா, இந்த புள்ளிவிவரங்களை அழுத்தமாக அல்லாமல், புதிய வரலாறு படைப்பதற்கான ஊக்கமாகவே பார்ப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "டி20 உலகக் கோப்பையில் நீண்ட காலமாக வெற்றிகளை பெறாத அணியாக நாங்கள் இருந்திருக்கிறோம். ஆனால் அதை நான் அழுத்தமாக பார்க்கவில்லை. மாறாக, வரலாற்றை மாற்றுவதற்கான சவாலாகவே எடுத்துக்கொள்கிறேன். கடந்த உலகக் கோப்பையில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. இருப்பினும் மற்ற போட்டிகளில் வெல்ல முடியாதது ஏமாற்றமாக இருந்தது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "கடந்த ஆண்டிலிருந்து எங்கள் அணியின் கட்டமைப்பு மிகவும் வலுவாக மாறியுள்ளது. முன்பை விட தற்போது அதிகமான வீராங்கனைகள் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். உலக அரங்கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி, அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என்று தெரிவித்தார்.
வரும் ஜூன் 12-ம் தேதி தொடங்கவுள்ள இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் வங்காளதேச அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய பலம் வாய்ந்த அணிகளும் இடம் பெற்றுள்ளன.