சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, காயத்திலிருந்து வேகமாக மீண்டு வருவதாகவும், அவர் விரைவில் போட்டிகளில் விளையாடுவதை ரசிகர்கள் காணலாம் என்றும் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக ஏற்பட்ட கணுக்கால் தசைநார் காயம் (Calf Injury) காரணமாக,தோனி கடந்த மூன்று வாரங்களாகப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது அவரது உடல்நிலை குறித்து மைக்கேல் ஹசி பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், ‘தோனியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் களத்திற்கு திரும்புவார். தோனி விளையாடுவதை காண ஒட்டுமொத்த சென்னையும் காத்துக் கொண்டிருக்கிறது’ என்றார். மேலும், போட்டி நடைபெறும் நாட்களில் தோனி ஏன் மைதானத்திற்கு வருவதில்லை என்பதற்கான காரணத்தையும் ஹசி விளக்கினார்.
"தோனி எப்போதும் அணியின் நலனை முன்னிறுத்துபவர். அவர் மைதானத்திற்கு வந்தால், கேமராக்கள் மற்றும் ரசிகர்களின் கவனம் அவர் மீது அதிகம் திரும்பும். இது விளையாடும் வீரர்களுக்கு ஒரு கவனச்சிதறலாக (Distraction) இருக்கக்கூடாது என்றே அவர் மைதானத்திற்கு வருவதைத் தவிர்க்கிறார். இருப்பினும், அவர் வீட்டில் இருந்தபடி போட்டிகளைத் தீவிரமாகக் கவனித்து வருகிறார்" என்றார்.