கிரிக்கெட்

ஐபிஎல் 2026: எந்த அணி கோப்பையை வென்றாலும் வரலாறு உறுதி... காரணம் என்ன?

இந்த சீசனில் கோப்பையை வெல்லும் அணி தனது 2-வது ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றும்.

சென்னை,

2026 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் பிளே-ஆப் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த சீசனில் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த முறை எந்த அணி கோப்பையை கைப்பற்றினாலும் அது ஒரு சிறப்பு சாதனையாக அமைய உள்ளது. ஏனெனில், பிளே-ஆப் சுற்றில் இருக்கும் நான்கு அணிகளும் ஏற்கனவே தலா ஒரு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. எனவே, இந்த சீசனில் கோப்பையை வெல்லும் அணி தனது 2-வது ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றும்.

புதிய சாம்பியன் உருவாகும் வாய்ப்பு இந்த முறை இல்லாவிட்டாலும், இரண்டாவது முறையாக அரியணையில் அமரும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2025-லும், குஜராத் டைட்டன்ஸ் 2022-லும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2016-லும், ராஜஸ்தான் ராயல்ஸ் 2008-லும் கோப்பையை வென்றுள்ளன.

இதனால், 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வெறும் கோப்பைக்கான போராட்டமாக மட்டுமல்லாமல், எந்த அணி தனது இரண்டாவது ஐபிஎல் கிரீடத்தை சூடும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மோதலாகவும் மாறியுள்ளது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும்-முன்னாள் சாம்பியன் குஜராத் அணியும் மோத உள்ளன.