கிரிக்கெட்

ஐபிஎல் - பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி... டெல்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 59(36)*ரன்கள் எடுத்தார்.

தர்மசாலா,

ஐபிஎல் தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ப்ரம்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய பிரியான்ஷ் ஆர்யா பவர்பிளே முடிவதற்கு முன்னரே தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பவர்பிளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தது. அப்போது மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ப்ரம்சிம்ரன் சிங் 18(15) ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து பிரியான்ஷ் ஆர்யாவும் 56(33) ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர்-கூப்பர் கனோலி ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். அப்போது மறுபுறம் நிதானமாக ஆடி வந்த கூப்பர் கனோலி 38(27) ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த ஸ்டொய்னிஸ்1(2) மற்றும் ஷஷாங் சிங் 0(1) விக்கெட்டை ஸ்டார்க் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய சூர்யான்ஷ் ஷெட்கே, ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரி விளாசினார். இதன் மூலம் ஸ்கோர் 200-ஐ கடந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 59(36)*ரன்கள் எடுத்தார். இதையடுத்து 211ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்க உள்ளது.