கிரிக்கெட்

ஐபிஎல்லில் புதிய சரித்திரம் படைத்த ராஜஸ்தான்... பஞ்சாப், ஐதராபாத் சாதனை முறியடிப்பு

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 3 முறை இந்த சாதனையை செய்திருந்தன.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயித்த 221 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை ராஜஸ்தான் துரத்திப் பிடித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே 220 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அதிகமுறை வெற்றிகரமாகத் துரத்திய ஒரே அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றுள்ளது.

லக்னோ அணி நிர்ணயித்த 221 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 19.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 220+ ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்வது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 3 முறை இந்த சாதனையை செய்திருந்தன. தற்போது ராஜஸ்தான் அவர்களை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் 220+ ரன்களை அதிகமுறை சேஸ் செய்த அணிகள்:

ராஜஸ்தான் ராயல்ஸ் - 4 முறை

பஞ்சாப் கிங்ஸ் - 3 முறை

சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 3 முறை

மும்பை இந்தியன்ஸ் - 2 முறை

லக்னோ அணிக்கு எதிரான இந்த இமாலய வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. லீக் சுற்றின் தனது கடைசிப் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால், எந்தவித கணக்கீடுகளும் இன்றி நேரடியாக பிளே-ஆப்க்கு தகுதி பெறும். ஒருவேளை தோல்வியடைந்தால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.