பெங்களூரு,
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு, மும்பை இந்தியன்ஸ் முன்னாள் வீரர் ஆதித்யா தாரே சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இளம் லெக் ஸ்பின்னர் சுயாஷ் சர்மா இந்த சீசனில் எதிர்பார்த்த அளவு சிறப்பாகச் செயல்படவில்லை என்றாலும், ஆர்சிபி அவரைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று தாரே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
"ஆர்சிபி அணி எப்போதும் ஒரு நிலையான ஆறாவது பந்துவீச்சாளர் இல்லாமல் திணறி வருகிறது. சுயாஷ் சர்மாவின் பார்ம் சற்றே குறைந்திருந்தாலும், அவரிடம் முழுமையான 4 ஓவர் கோட்டாவையும் வழங்க வேண்டும். பார்ட்-டைம் பந்துவீச்சாளர்களை நம்புவதை விட சுயாஷ் மீது நம்பிக்கை வைப்பதே நல்லது. ஷெப்பர்டிடம் 2 ஓவர்கள் கொடுப்பதை விட, சுயாஷை முழுமையாகப் பயன்படுத்துவது பலன் தரும். இந்த ஆண்டு ஷெப்பர்ட் பந்துவீச்சில் சோபிக்கவில்லை. ஆர்சிபி தனது ஐபிஎல் கோப்பையைத் தக்கவைக்க வேண்டுமானால் (Defend Title), சுயாஷுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்க வேண்டும்," என்றார்.
ஐபிஎல் 2026-ல் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சுயாஷ், 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். லக்னோவுக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்தார்.