கிரிக்கெட்

ஐபிஎல் பிளே-ஆப்: வரலாறு படைத்த ஆர்சிபி... குஜராத்தின் சாதனையை உடைத்து அசத்தல்

பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தர்மசாலா,

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளி), குஜராத் டைட்டன்ஸ் (18), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18), ராஜஸ்தான் ராயல்ஸ் (16) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்த நிலையில் புள்ளிபட்டியலில் டாப்-2 இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நேற்று மோதின.

இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலாவதாக களமிறங்கிய பெங்களூரு அணியின் விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ரன்களை குவித்தனர். இவர்கள் அவுட்டாக இணைந்த கேப்டன் ரஜத் படிதார் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஜோடி அதிரடியாக ரன்கள் குவித்தது. இதில் வாணவேடிக்கை காட்டிய ரஜத் படிதார் 21 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து பேட்டிங்கில் மிரட்டிய ரஜத் படிதார் 93 (33) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் ஐபிஎல் பிளே ஆப் சுற்று வரலாற்றில் அதிக ஸ்கோர் (254) குவித்த அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்தது. இதற்கு முன்னதாக 2023-ம் ஆண்டு நடந்த 2-வது தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணி மும்பைக்கு எதிராக 233 எடுத்ததே அதிகமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஆர்சிபி தகர்த்து வரலாறு படைத்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.

தொடக்கம் முதல் குஜராத் வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சாய் சுதர்சன் 14 ரன்கள் , கில் 2 ரன்கள் ஜோஷ் பட்லர் 29 ரன்கள் , நிஷாந்த் சிந்து 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பெங்களுரு அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் குஜராத் அணி ரன்கள் குவிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. குஜராத் அணியில் திவேட்டியா மட்டும் நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தார்.

இதனால் 19.3 ஓவர்கள் முடிவில் 162 ரன்களுக்கு குஜராத் அணி ஆட்டமிழந்தது. 92 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த குஜராத் அணி வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.