தர்மசாலா,
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18 புள்ளி), குஜராத் டைட்டன்ஸ் (18), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18), ராஜஸ்தான் ராயல்ஸ் (16) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் பெங்களூரும், முன்னாள் சாம்பியனான குஜராத்தும் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நேற்று மோதின.
தரம்சாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலாவதாக களமிறங்கிய பெங்களூரு அணி குஜராத் பந்துவீச்சை பஞ்சர் செய்தது. பேட்டிங்கில் மிரட்டிய ரஜத் படிதார் 93 (33) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.
தொடக்கம் முதல் குஜராத் வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். திவேட்டியா மட்டும் நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தார்.
இறுதியில் 19.3 ஓவர்கள் முடிவில் 162 ரன்களுக்கு குஜராத் அணி ஆட்டமிழந்தது. இதன் மூலம் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு பெங்களூரு (ஆர்சிபி) அணி தகுதிப்பெற்றுள்ளது. 2009, 2011, 2016, 2025-ம் ஆண்டுகளை தொடர்ந்து 5வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதில் 2025-ம் ஆண்டு மட்டும் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
ஆர்சிபி அணி இறுதிப் போட்டியில், வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள குவாலிபயர் 2 ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோத உள்ளது. இப்போட்டியில் வென்று 2-வது முறையாக ஆர்சிபி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏறபட்டுள்ளது.