கிரிக்கெட்

ஐபிஎல்: முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா குஜராத் ?... பஞ்சாப்புடன் இன்று மோதல்

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

ஆமதாபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய 46-வது லீக் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியை, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

நடப்புத் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி, 5 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் 8 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் உள்ளது பஞ்சாப் அணி. இதுவரை இவ்விரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் 4 முறையும், குஜராத் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தனது முதலிடத்தைத் தக்கவைக்க பஞ்சாப் அணியும், புள்ளிப் பட்டியலில் முன்னேறவும் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத் அணியும் மல்லுக்கட்டும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.