கிரிக்கெட்

இளையோர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

இங்கிலாந்து அணி 28 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கையில் ஏந்த தீவிரம் காட்டுகிறது.

ஹராரே,

16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இதில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணி, லீக் சுற்றில் அமெரிக்கா, வங்காளதேசம், நியூசிலாந்தை யும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே, பாகிஸ்தானையும் தோற்கடித்து தனது பிரிவில் (குரூப் 2) முதலிடம் பிடித்தது. அரைஇறுதியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 311 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை படைத்ததோடு 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணியில் பேட்டிங்கில் அதிரடி சூறாவளி வைபவ் சூர்யவன்ஷி (3 அரைசதம் உள்பட 264 ரன்), விஹான் மல்கோத்ரா (ஒரு சதம் உள்பட 210 ரன்), அபிக்யான் குண்டு (இரு அரைசதம் உள்பட 199 ரன்), ஆரோன் ஜார்ஜ் (ஒரு சதம் உள்பட 161 ரன்), கேப்டன் ஆயுஷ் மாத்ரே (2 அரைதம் உள்பட 161 ரன்) நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹெனில் பட்டேல் (11 விக்கெட்), அம்பிரிஷ், கிலான் பட்டேல் பலம் சேர்க்கின்றனர். மாத்ரே, மல்கோத்ரா பந்து வீச்சிலும் பயனுள்ள பங்களிப்பை அளிக்கின்றனர்.

1998-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி லீக்கில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்தையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் வங்காளதேசம், நியூசிலாந்தையும் துவம்சம் செய்து தனது (குரூப் 2) பிரிவில் ரன்-ரேட் அடிப்படையில் 2-வது இடம் பெற்றது. அரைஇறுதியில் 27 ரன் வித்தியா சத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது முறையாக இறுதி சுற்றை எட்டியது.

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் பென் மேயஸ் (ஒரு சதம், 2 அரைச தம் உள்பட 399 ரன்), கேப்டன் தாமஸ் ரெவ் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 299 ரன்) ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டாவ்கின்ஸ், ஜோசப் மூர்ஸ் ஆகியோர் தடுமாறு வது அந்த அணிக்கு பலவீனமாகும். பந்து வீச்சில் மன்னி லும்ஸ்டென் (15 விக்கெட்), ரால்பி ஆல்பர்ட், செபாஸ்டியன் மோர்கன், பர்ஹான் அக மது நம்பிக்கை அளிக்கின்றனர்.

இந்திய அணி 6-வது முறையாக கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஆர்வத்துடன் உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி 28 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கையில் ஏந்த தீவிரம் காட்டுகிறது. தோல்வியே சந்திக்காத இவ்விரு அணிகளும் சந்திக்கும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.