கிரிக்கெட்

ஐபிஎல் - தோனியால் கூட முடியாத அரிய சாதனை... வரலாறு படைத்த கே.எல்.ராகுல்

தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் ஒரே சீசனில் அதிகபட்சமாக 4 அரைசதங்கள் பதிவு செய்திருந்தார்.

சென்னை,

2026 ஐபிஎல் லீக் சுற்றின் கடைசி போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய வரலாறு படைத்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிராக ஈடென் கார்டென் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் ரஹானே முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி அந்த அணியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுல் அதிரடி அரைசதம் பதிவு செய்தார். 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் வெறும் 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இது அவரது ஐபிஎல் வாழ்க்கையின் 45-வது அரைசதமாகும்.

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் ஒருவராக ராகுல் தனது பெயரை மீண்டும் பதித்துள்ளார். 2026 சீசனில் அவர் பதிவு செய்த 6-வது 50+ ஸ்கோர் இதுவாகும்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பர் ஒரே சீசனில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட 50+ ஸ்கோர்களை பதிவு செய்தது மிகவும் அரிதான நிகழ்வாகும். இந்த சாதனையை முன்னதாக ரிஷப் பண்ட் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் நிகழ்த்தியிருந்தாலும், இரண்டு வெவ்வேறு ஐபிஎல் சீசன்களில் 6 அரைசதங்கள் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற தனித்துவமான சாதனையை ராகுல் மட்டுமே பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு 2018 ஐபிஎல் தொடரிலும் ராகுல் 6 அரைசதங்கள் அடித்திருந்தார். தற்போது 2026 சீசனிலும் அதே சாதனையை மீண்டும் நிகழ்த்தி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.

மறுபுறம், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் ஒரே சீசனில் அதிகபட்சமாக 4 அரைசதங்கள் பதிவு செய்திருந்தார். அந்த சாதனையை அவர் 2013 சீசனில் நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.