மும்பை,
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் உருவெடுத்துள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அவர் 27 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.
இந்த தொடரில் இவரது ஆட்டத்தை பார்த்த பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பெங்களூரு அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தினேஷ் கார்த்திக் குறித்து பேசியுள்ளார்.
கார்த்திக் குறித்து அவர் பேசுகையில்," தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை பார்த்து நம்பமுடியாத அளவிற்கு ஆச்சரியப்பட்டேன். நான் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் மிகவும் திறமையான வீரர் என்பது எனக்கு எப்போதும் தெரியும்.
அவர் அதிக அழுத்த சூழ்நிலைகளை விரும்புபவர். ஐபிஎல் போட்டிக்கு முன்பு நான் அவரை கடைசியாக பார்த்தபோது அவர் இங்கிலாந்தில் வர்ணனை செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் இருக்கலாம். ஆனால் அவரது ஆற்றலுடன் நம்மை ஆச்சரியப்படுத்திவிட்டார்" என அவர் தெரிவித்தார்.