கிரிக்கெட்

கொல்கத்தாவுக்கு பலத்த அடி: காயம் காரணமாக ரகுவன்ஷி விலகல்

ரகுவன்ஷியின் இந்த திடீர் விலகல் கொல்கத்தா அணிக்கு நிச்சயம் ஒரு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அந்த அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அங்கிரிஷ் ரகுவன்ஷி காயம் காரணமாக எஞ்சிய ஐ.பி.எல். தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த கடந்த ஆட்டத்தில், பந்தை கேட்ச் செய்ய முயன்றபோது அங்கிரிஷ் ரகுவன்ஷி, சக வீரரான வருண் சக்ரவர்த்தி மீது எதிர்பாராதவிதமாக பலமாக மோதி கீழே விழுந்தார். இந்த மோதலின் காரணமாக அவருக்கு தலைக்குள் அதிர்வு (Concussion) இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதனால் அவர் அந்த ஆட்டத்தில் மேற்கொண்டு தொடர்ந்து விளையாடாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

தற்போது அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இடது கை விரலில் எலும்பு முறிவு (Fracture) ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இந்த ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரகுவன்ஷி, 5 அரைசதங்கள் உள்பட 422 ரன்கள் குவித்து நல்ல பார்மில் இருந்தார். அடுத்த சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா அணி கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், ரகுவன்ஷியின் இந்த திடீர் விலகல் கொல்கத்தா அணிக்கு நிச்சயம் ஒரு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.