மும்பை,
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்தில் காயம் காரணமாக சில முக்கிய வீரர்கள் விலகியுள்ள நிலையில், மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மாற்று வீரர்களை அறிவித்துள்ளன.
மும்பை அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டரான டிகாக், இடது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியநிலையில், அவருக்கு பதிலாக ராஜஸ்தானை சேர்ந்த ஆல்ரவுண்டர் மஹிபால் லோம்ரோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 26 வயதான லோம்ரோர், ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வலது கை கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய ராஜ் அங்கத் பாவாவுக்கு பதிலாக 25 வயதான சௌராஷ்டிரா பேட்டர் ருசித் அஹிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் அனுபவம் இல்லாத ருசித் அஹிர், உள்நாட்டு டி20 போட்டிகளில் 41.62 சராசரியுடன் 169.03 ஸ்ட்ரைக் ரேட்டில் 333 ரன்கள் குவித்து கவனம் ஈர்த்துள்ளார்.
மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, காயம் காரணமாக விலகிய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரவி சிங்குக்கு பதிலாக, இமன்சோத் சஹாலை ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஏலத்தில் ரூ.95 லட்சத்திற்கு வாங்கப்பட்ட ரவி சிங், தொடைப்பகுதி காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகினார்.
புதிதாக அணியில் இணைந்துள்ள இமன்சோத் சஹால், இதுவரை சீனியர் டி20 அல்லது ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும், 3 முதல்தர போட்டிகளில் விளையாடி 105 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் கைப்பற்றி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் தனது கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கான கடைசி இடத்தை அதிகாரபூர்வமாக உறுதி செய்ய முடியும். இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.