டாக்கா,
வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், பெவன் ஜேக்கப்ஸின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மழை முக்கியப் பங்கு வகித்தது. வங்காளதேச அணியின் இன்னிங்ஸின் போது மதியம் 2:37 மணிக்கு பலத்த மழை பெய்ததால் ஆட்டம் சுமார் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் மாலை 4:30 மணிக்கு ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது, ஒரு அணிக்கு 15 ஓவர்கள் என குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் ஹிரிடோய் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் கிளார்க்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் வங்கதேசம் 15 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு, பெவன் ஜேக்கப்ஸ் மிரட்டலான தொடக்கத்தை தந்தார். வெறும் 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 62 ரன்கள்* குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 11.4 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வங்காளதேச அணி தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது, இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. தற்போது மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து, இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.