கிரிக்கெட்

"இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் விளையாட ஆசை" - பாகிஸ்தானை வீழ்த்திய பின் வங்களாதேச கேப்டன் பேச்சு

பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் வங்களாதேச அணி பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும்.

சில்ஹெட்,

பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற முன்னணி நாடுகளுக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வங்களாதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ கூறி உள்ளார்.

சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் இறுதி நாளில், 437 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியை 358 ரன்களில் வங்களாதேச அணி சுருட்டியது. பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் வங்களாதேச அணி பெறும் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும்.

இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் சாண்டோ, வங்களாதேச அணி இனிவரும் காலங்களில் உலகின் முன்னணி டெஸ்ட் அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணிலும், வெளிநாடுகளிலும் தொடர்ந்து விளையாட விரும்புவதாக தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "நாங்கள் உண்மையில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறோம். எல்லா அணிகளுடனும் மோத விரும்புகிறோம். குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற வலுவான அணிகளுடன் அவர்களின் சொந்த மண்ணிலும், எங்கள் நாட்டிலும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஏனெனில், நமக்கு அதிக போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போதுதான் புதிய அனுபவங்கள் கிடைக்கும். அதன் மூலம் மட்டுமே அணியை மெதுவாகக் கட்டமைக்க முடியும். அப்படி இல்லாமல், ஒரே அணியுடன் மீண்டும் மீண்டும், ஒரே மாதிரியான பிட்ச் சூழலில் விளையாடினால் ஒரு சிறந்த அணியை உருவாக்குவது கடினம். எனவே, ஐசிசி எங்களுக்கு மற்ற அணிகளுடன் அதிக போட்டிகளை அட்டவணைப்படுத்தும் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.