கிரிக்கெட்

"வெற்றி என்பது போதை போன்றது" - இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றி, அணியினருக்கு மேலும் சிறப்பாக செயல்படுவதற்கான புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளதாக இந்திய மகளிர் அணியின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணில் கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, அதே உற்சாகத்துடன் தற்போது வரவிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்குத் தயாராகி வருகிறது. இந்தத் தொடர் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.

இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஜூன் 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் தனது உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்குகிறது. மேலும், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளையும் இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில், பிசிசிஐ மகளிர் அணியின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், “கடந்த உலகக் கோப்பை வெற்றி, நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது.

ஒருமுறை நீங்கள் உலகக் கோப்பையை வென்றுவிட்டால், அது ஒரு போதை போல மாறிவிடுகிறது. அதன் பிறகு மீண்டும் ஒரு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே உருவாகிறது. அதுதான் உங்களை இன்னும் அதிகமாக உழைக்கத் தூண்டுகிறது.

நாங்கள் பயிற்சியைத் தொடங்கிய நாளிலிருந்தே, ‘இன்னும் ஒரு கோப்பையை வெல்ல வேண்டும்’ என்ற வெறி அணியில் உள்ள ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அந்த மனநிலையுடன்தான் நாங்கள் உலகக் கோப்பையை எதிர்நோக்கி தயாராகி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.