ராஞ்சி,
23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான அகில இந்திய ஜூனியர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரைஇறுதியில் தமிழக அணி மராட்டியத்தை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 45.2 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியில் அதிகபட்சமாக சுபாஹரிணி 32 ரன்கள் எடுத்தார். மராட்டிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆச்சல் அகர்வால் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மராட்டிய அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆட்டத்தை நடத்த இயலாத நிலையில், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் மராட்டிய அணி (20 புள்ளிகள்) இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தமிழக அணி லீக் சுற்றில் 16 புள்ளிகள் எடுத்திருந்ததால் அரைஇறுதியுடன் வெளியேறியது.