கவுகாத்தி,
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - சத்தீஷ்கார் (எச் பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கவுகாத்தியில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது.
முதலில் பேட் செய்த தமிழகம் 9 விக்கெட்டுக்கு 470 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய சத்தீஷ்கார் 304 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 166 ரன்கள் தங்கிய நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய சத்தீஷ்கார் ஒரு வழியாக போராடி டிரா கண்டது. அந்த அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. 166 ரன்களுடன், இரு இன்னிங்சையும் சேர்த்து 5 விக்கெட்டும் வீழ்த்திய தமிழக வீரர் பாபா அபராஜித் ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளியும், சத்தீஷ்காருக்கு ஒரு புள்ளியும் கிடைத்தது.
ஆமதாபாத்தில் நடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ( டி பிரிவு) 232 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கோவா அணி 48 ஓவர்களில் 112 ரன்னில் சுருண்டது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் மும்பை அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 6 புள்ளிகளையும் தட்டிச் சென்றது.