கோப்புப்படம் 
கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்

தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 2-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.

தினத்தந்தி

பார்ல்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இந்தியா நெருக்கடியான சூழலில் களம் இறங்குகிறது.

தொடக்க ஆட்டத்தை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 296 ரன்கள் குவித்தது. கேப்டன் பவுமாவும், வான்டெர் துஸ்செனும் சதம் விளாசினர். 3 விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்திய இந்திய பவுலர்கள் மிடில் வரிசையில் கோட்டை விட்டனர். பவுமா-துஸ்சென் ஜோடி நிலைத்து நின்று ஆடியதுடன் சுழற்பந்து வீச்சை ஸ்வீப் ஷாட் வகையில் திறம்பட கையாண்டனர். புதிய வரவான ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யருக்கு ஒரு சில ஓவர் கொடுத்திருக்கலாம். ஆனால் ஏனோ கேப்டன் லோகேஷ் ராகுல் அவரை பந்து வீச அழைக்கவில்லை.

இந்தியாவின் பேட்டிங்கில் ஷிகர் தவான் (79 ரன்)- விராட் கோலி (51 ரன்) களத்தில் நின்றது வரை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தது. ஆனால் இந்த ஜோடி வெளியேறிய பிறகு, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்டோர் சொதப்பியதால் 265 ரன்னுடன் இந்தியா அடங்கிப்போனது. இத்தனைக்கும் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாகவே காணப்பட்டது. சுழற்பந்து வீச்சும் ஓரளவு எடுபட்டது. முதல் ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இன்றைய ஆட்டத்தில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரை வெல்வதிலும் தீவிரம் காட்டுகிறது. முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்ததால் அந்த அணி கேஷவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி, மார்க்ராம் ஆகியோருடன் சுழல் தாக்குதலை தொடுத்தது. இந்த ஆட்டத்திலும் இதே சுழல் ஜால கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், அஸ்வின், ஷர்துல் தாக்குர் அல்லது ஜெயந்த் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ஜேன்மன் மலான், மார்க்ராம், பவுமா (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கேஷவ் மகராஜ், ஷம்சி, மார்கோ ஜான்சென், லுங்கி இங்கிடி.

இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது