கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்... இலங்கை அணியின் ஒருநாள், டி20 கேப்டனாக குசல் மெண்டிஸ் நியமனம்

டெஸ்ட் அணியை தொடர்ந்து தனஞ்சயா டி சில்வா வழிநடத்துகிறார்.

கொழும்பு,

இலங்கை அணியின் லிமிட்டெட் ஓவர்ஸ் கிரிக்கெட்டுக்கான புதிய கேப்டனாக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் மேற்கொண்டு அங்கு டி20, ஓடிஐ மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில், அந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

குசல் மெண்டிஸ் ஏற்கனவே 17 ஒருநாள் போட்டிகளில் ஸ்ரீலங்கா அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். தற்போது முதல் முறையாக டி20 அணியின் கேப்டன்சி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதால், அவரது தலைமையில் ஸ்ரீலங்கா அணி புதிய பயணத்தை தொடங்குகிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடிய பல முக்கிய வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இஷான் மலிங்கா ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காயத்திலிருந்து மீண்டுள்ள வனிந்து ஹசரங்கா மீண்டும் இரு அணிகளிலும் இணைந்துள்ளார்.

மேலும், நுவான் துஷாரா டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரர் லசித் குரூஸ்புள்ளே மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

டெஸ்ட் அணியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நிஷான் மதுஷ்கா, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் லஹிரு குமார ஆகியோர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். டெஸ்ட் அணியை தொடர்ந்து தனஞ்சயா டி சில்வா வழிநடத்துகிறார்.

புதிய கேப்டன் குசல் மெண்டிஸ் தலைமையில் இந்த சுற்றுப்பயணம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய சகாப்தத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.