மும்பை,
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 15-வது ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிராண்டன் கிங் 1 ரன்னிலும், ஷாய் ஹோப் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மியர் 23 ரன்களிலும், ரோஸ்டன் சேஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஷெர்பேன் ரூதர்போர்டு அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்கள் எடுத்தது. ஷெர்பேன் 76 ரன்களுடனும், ரொமாரியோ ஷெப்பர்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் ஜேமி ஓவர்டன் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் சாம் கரன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
சவாலான இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.