கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காலே,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249 ரன்களும், இலங்கை 267 ரன்களும் எடுத்தன. 18 ரன் பின்தங்கிய நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 268 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. கேப்டன் கருணாரத்னே (71 ரன்), திரிமன்னே (57 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடந்து ஆடிய இலங்கை தொடக்க ஜோடி ஸ்கோர் 161 ரன்களை எட்டிய போது பிரிந்தது. திரிமன்னே 64 ரன்களிலும், அடுத்து வந்த குசல் மென்டிஸ் 10 ரன்னிலும் வீழ்ந்தனர். மறுமுனையில் அபாரமாக ஆடிய கருணாரத்னே பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 9-வது சத்தை நிறைவு செய்தார். மேலும் இலக்கை நோக்கி ஆடும் இன்னிங்சில் சதம் அடித்த 3-வது இலங்கை தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். கருணாரத்னே 122 ரன்களில் (243 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். சிறிது நேரமே நின்ற குசல் பெரேரா 23 ரன்களில் (19 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார்.

இதன் பின்னர் முன்னாள் கேப்டன் மேத்யூஸ் (28 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (14 ரன்) கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இலங்கை அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே 86.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 268 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச சேசிங் இது தான். இதற்கு முன்பு 100 ரன்களுக்கு மேலான ஸ்கோரை கூட எட்டிப்பிடித்ததில்லை. இந்த ஆட்டத்தையும் சேர்த்து இலங்கை மண்ணில் தொடர்ச்சியாக 25 டெஸ்டுகளில் முடிவு கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

கருணாரத்னே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் கணக்கிடப்படுகிறது. இதன்படி வெற்றி பெற்ற இலங்கை அணி 60 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை வசப்படுத்தி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி கொழும்பில் தொடங்குகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு