புது டெல்லி,
ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 25) இரவு நடைபெற்று வரும் 36-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணி, ராஜஸ்தான் அணியுடன் மோதி வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்சி களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 10(8) ரன்களில் அவுட்டாக ஜுரெல் களமிறங்கினார். மறுமுனையில், அதிரடியில் மிரட்டிய சூர்யவன்சி 15 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். பவர்பிளே முடிவில் 76 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இருவரும் அதிரடி காட்ட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
அப்போது ஜுரெல் அரைசதம் அடித்தநிலையில் அவுட்டானார். பின்னர் ரியான் பராக் களமிறங்கினார். மறுமுனையில் ஐதராபாத் பந்துவீச்சை தெறிக்கவிட்ட சூர்யவன்சி 36 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அடுத்த பந்திலேயே அவர் அவுட்டானநிலையில், களமிறங்கிய டோனோவன் பெரேரா அதிரடி காட்டினார்.
மறுபுறம் பராக் 7(9) ரன்களில் அவுட்டாக ஹெட்மயர் களமிறங்கினார். அப்போது அதிரடியாக விளையாடின பெரேரா 33(16) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 228 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யவன்சி 103 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக மலிங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்க உள்ளது.