கிரிக்கெட்

உலக சாதனை படைத்த விராட் கோலி... டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்

விராட் கோலி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஒரு உலக சாதனையை முறியடித்துள்ளார்.

ஐதராபாத்,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஒரு உலக சாதனையை முறியடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்ட வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், தனது புதிய ஓப்பனிங் பார்ட்னரான வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டினார்.

கோலிக்கு இது 211-வது 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆகும். இதன் மூலம் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸின் (210 முறை) சாதனையை கோலி முறியடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (200+ முறை) இந்த பட்டியலில் உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ சண்டிகரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹேல்ஸின் சாதனையை கோலி சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.