கிரிக்கெட்

கோலி கொடுத்த ஐடியாவிலேயே கோலியை காலி செய்த பிரின்ஸ் யாதவ்... ரகசியத்தை உடைத்த லக்னோ வீரர்

லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

சென்னை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், விராட் கோலி கொடுத்த அறிவுரையையே பயன்படுத்தி அவரை 'டக்-அவுட்' செய்த இளம் வீரர் பிரின்ஸ் யாதவ், தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளார். இப்போட்டியில் லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி சதம் (111 ரன்கள்) விளாசினார். இதனால் 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 209/3 ரன்கள் எடுத்தது. மழை குறுக்கிட்டதால் DLS முறையில் பெங்களூரு அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பெங்களூரு அணியால் 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இப்போட்டியில் கோலி தான் சந்தித்த 2-வது பந்தீலேயே டக் அவுட் ஆகி வெளொயேறினார். பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தில் போல்ட் ஆனார். ஐபிஎல் வரலாற்றில் 'சேஸிங் மாஸ்டர்' என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கு இது ஒரு கசப்பான அனுபவமாக அமைந்தது. இலக்கை துரத்தும் போது (Chasing) கோலி டக்-அவுட் (0) ஆவது இது கடந்த 9 ஆண்டுகளில் முதல் முறையாகும்.

போட்டிக்கு பின் கோலியை அவுட்டாக்கியது பற்றி பிரின்ஸ் யாதவ் பேசினார். அவர் கூறுகையில், "கடந்த போட்டியின் போது நான் விராட் பாயை (கோலி) சந்தித்து சில டிப்ஸ் கேட்டேன். அப்போது அவர், 'பந்து நன்றாக ஸ்விங் ஆகும் போது, லெந்தை (Length) மாற்றாதே; அதே லெந்தில் தொடர்ந்து பந்துவீசு' என்று கூறினார். அவர் சொன்ன அதே டிப்ஸை தான் நான் அவருக்கு எதிராகப் பயன்படுத்தினேன்" என்றார். இப்போட்டியில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.