Image courtesy: @ImVanithaVR @izzywestbury 
கிரிக்கெட்

மிதாலி ராஜ் குறித்து பிரிட்டன் வர்ணனையாளர்- இந்திய வீராங்கனை இடையே வார்த்தைப் போர்..!

பிரிட்டிஷ் வர்ணனையாளரும் பத்திரிகையாளருமான இசபெல் வெஸ்ட்பரி மற்றும் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீராங்கனை விஆர் வனிதா இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது.

குயின்ஸ்டவுன்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 270 ரன்கள் எடுத்தது.அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 49 ஓவர் முடிவில் 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. 3-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 81 பந்துகளை சந்தித்து 66 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் அவருடைய நிதான ஆட்டம் குறித்து பிரிட்டிஷ் வர்ணனையாளரும் பத்திரிகையாளருமான இசபெல் வெஸ்ட்பரி மற்றும் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீராங்கனை விஆர் வனிதா இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது.

இசபெல் வெஸ்ட்பரி, கேப்டன் மிதாலி ராஜ் விளையாடியதை குறித்து கூறியதாவது, மிதாலி ராஜ் தான் தற்போது இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான விஷயம் ஆக உள்ளார் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருந்த முன்னாள் வீராங்கனை விஆர் வனிதா, அதில் 'சிறப்பான விஷயம்' மட்டுமே உள்ளது என்று பதிவிட்டிருந்தார். மேலும், கூடுதலாக, இந்திய கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் கவலைப்படுவதை விட, இங்கிலாந்தைப் பற்றி கவலைப்படுவது உங்களுக்கு நன்மை தரும் என்று பதிவிட்டார்.

இதனை ஒப்புக்கொண்ட வெஸ்ட்பரி, ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிதாலி ராஜ் முற்றிலும் பொருந்த மாட்டார் என்று பதில் கூறினார்.

இந்த காரசார விவாதம் மேலும் தொடர்ந்தது. வனிதா தொடர்ந்து, இந்தியாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் உங்கள்(பிரிட்டன்) காலனித்துவ மனப்பான்மை இன்னும் நீங்கவில்லை என்று பதிவிட்டார்.

இந்த விஷயம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கிடையே, ஆட்டத்தின் போக்கை பொறுத்தே அதிரடியாக விளையாட வேண்டுமா அல்லது நிதானமாக விளையாட வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியும் என்று மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் அமெலியா கெர் நிதானமாக ஆடி 135 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், இதே போல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி நிதானமாக ஆடி 80 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்