கொல்கத்தா,
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2025-26 கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால் எப்சி அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள கிஷோர் பாரதி கிரீராங்கன் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், ஈஸ்ட் பெங்கால் அணி இன்டர் காஷி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
லீக் சுற்றின் முடிவில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் மோஹுன் பாகன் சூப்பர் ஜெயண்ட் அணிகள் தலா 26 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. எனினும், +19 என்ற சிறந்த கோல் வித்தியாசத்தை பெற்றிருந்த ஈஸ்ட் பெங்கால் அணி, +14 கோல் வித்தியாசம் கொண்ட மோஹுன் பாகன் அணியை முந்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன் மூலம் ஈஸ்ட் பெங்கால், ஐஎஸ்எல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. மேலும், கடந்த 22 ஆண்டுகளாக பட்டத்திற்காக காத்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்களின் ஏக்கம் முடிவுக்கு வந்தது.
பட்டத்திற்கான போட்டியில் கடைசி வரை ஈஸ்ட் பெங்காலுக்கு கடும் சவால் அளித்த மோகன் பகான் அணி, மற்றொரு ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இருப்பினும், கோல் வித்தியாசம் காரணமாக அந்த அணிக்கு இரண்டாவது இடமே கிடைத்தது.
மற்ற ஆட்டங்களில் மும்பை சிட்டி எப்சி அணி பஞ்சாப் எப்சியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஒடிசா எப்சி - ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதிய போட்டி கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. மும்பை சிட்டி எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் முறையே 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடித்தன.