கால்பந்து

6வது முறையாக கால்பந்து உலகக் கோப்பையில் மெஸ்ஸி... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது.

பியூனஸ் ஐர்ஸ்,

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான 26 பேர் கொண்ட அர்ஜென்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை அணியில் மீண்டும் மெஸ்ஸி!

அந்த அணியின் கேப்டனாக மெஸ்ஸியே தொடருவார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் 6-வது முறையாக மெஸ்ஸி பங்கேற்க உள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின்போது காயத்தால் அதிர்ச்சி

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேஜர் லீக் சாக்கர் தொடரில், இண்டர் மியாமிஅணி, பிலடெல்பியா அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியின் 73-வது நிமிடத்தில் மெஸ்ஸி திடீரென தனது இடது தொடையின் பின்பகுதியைப் பிடித்தபடி அசெளகரியத்தை வெளிப்படுத்தினார். பின்னர் மாற்று வீரரை களமிறக்க சொல்லி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மருத்துவ பரிசோதனையில் வெளியான தகவல்

இதையடுத்து, திங்கட்கிழமை அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அதிகப்படியான பணிச்சுமை காரணமாக இடது தொடைப் பகுதியில் கடுமையான தசைப்பிடிப்பு மற்றும் தசை சோர்வு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது.

ரசிகர்களுக்கு வந்த நிம்மதி செய்தி

இந்நிலையில், உலகக் கோப்பை அணியில் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.