பிற விளையாட்டு

19 வயதில் வரலாறு… பார்முலா1 கார் பந்தயத்தில் கிமி சாதனை

4-வது சுற்று போட்டி மே 3ஆம் தேதி அமெரிக்காவின் மியாமியில் நடைபெற உள்ளது.

சுசூகா:

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. அதன் 3-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி ஜப்பானின் சுசூகா ஓடுதளத்தில் நடைபெற்றது.

மொத்தம் 307.471 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் 11 அணிகளைச் சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இத்தாலி வீரர் கிமி அன்டோனெல்லி 1 மணி 28 நிமிடம் 03.403 விநாடிகளில் பந்தயத்தை முடித்து முதலிடம் பிடித்து 25 புள்ளிகளை பெற்றார். 19 வயதான கிமி அண்டோனெல்லிக்கு இந்த சீசனில் கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும். அவரை விட 13.722 விநாடிகள் பின்தங்கிய ஆஸ்கர் பியாஸ்ட்ரி 2-வது இடத்தை பிடித்தார்.

முன்னாள் சாம்பியன்களான லீவிஸ் ஹாமில்டன் 6-வது இடத்திலும், மேக்ஸ் வெர்ஸ்டப்பென் 8-வது இடத்திலும் முடித்தனர். மூன்று சுற்றுகள் முடிவில் கிமி அண்டோனெல்லி 72 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். ஜார்ஜ் ரஸ்செல் 63 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அடுத்ததாக 4-வது சுற்று போட்டி மே 3ஆம் தேதி அமெரிக்காவின் மியாமியில் நடைபெற உள்ளது.