பர்மிங்காம்,
நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த ஆல் இங் கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) முதல் 8-ந்தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.13¼ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் உலக சாம்பியன் ஷி யுகி (சீனா), கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), ஆன்டன்சென் (டென்மார்க்), பெண்கள் ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் நட்சத்திரமுமான அன் செ யங் (தென்கொரியா). வாங் ஜியி (சீனா), முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான சென் யுபி (சீனா), 3 முறை உலக சாம்பியனான அகானே யமாகுச்சி (ஜப்பான்) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
அதே சமயம் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமையில் தவிக்கிறார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக துபாயில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. துபாய் வழியாக இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற பி.வி.சிந்துவும் மற்றும் அவரது பயிற்சியாளர் இர்வான்ஸ்யாவும் துபாய் விமான நிலையத்தில் சிக்கினர்.
துபாயில் விமான சேவை இன்னும் சரியாகாததால் சிந்து பர்மிங்காம் செல்வது கடினம்தான். எனவே அவர் போட்டியை தவறவிடுகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா முன்பதிவு செய்து இருந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் தனது பயணத் திட்டத்தை மாற்றியமைத்து சிங்கப்பூர் வழியாக பர்மிங்காமுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் இங்கிலாந்துக்கு சென்று விட்டனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2022-ம் ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான இந்திய வீரர் லக்சயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியன் ஷி யுகியை சந்திக்கிறார். மற்றொரு இந்திய இளம் வீரரான ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேசியாவின் அல்வி பர்ஹானை எதிர்கொள்கிறார். பெண்கள் ஒற்றையரில் இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் தனது முதல் ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான சென் யுபி யுடன் (சீனா) மல்லுக்கட்டுகிறார். இன்னொரு இந்திய 'இளம் புயல்' உன்னதி ஹூடா, தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங்குடன் மோதுகிறார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையர் பிரிவில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபி சந்த், கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா - தனிஷா கிரஸ்டோ ஆகிய இந்தியர்களும் கால் பதிக்கிறார்கள். விமான சேவை பாதிப்பு காரணமாக தாமதமாக வந்து சேரும் வீரர்களுக்கான அட்டவணையை மாற்றியமைக்க தயார் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கவுரவமிக்க ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்தியர்களில் பிரகாஷ் படுகோனே (1980-ம் ஆண்டு), கோபிசந்த் (2001) ஆகியோர் மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சாய்னா நேவால் (2015), லக்சயா சென் (2022) 2-வது இடம் பிடித்ததே சிறந்த செயல்பாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.